அன்பிற்குப் பஞ்சமில்லை
ஆர்.சுமதி
Belletristik/Erzählende Literatur
Beschreibung
அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.
“இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி போய்விடுவேன்” என்று மிரட்டினாள்.
“நான் சொல்றதை நீ கேளு. எனக்கு ஒண்ணும் வேண்டாம்” என்றான் குகன்.
அதேநேரம் பின்னால் ஒரு குரல் அவர்களின் உரையாடலுக்கு இடையில் புகுந்தது.
“அலோ... குகன்...”
குரல் அதிரடி தாக்குதலாய் கேட்க சண்டைக்கிடையில் சட்டென அமைதியாகி திரும்பினான் குகன். மறுகணம் பற்பசை விளம்பரமாய் சிரித்தான்.
அவனுடைய அலுவலக மேனேஜர் சந்திரன் நின்றிருந்தான்.
“அலோ சார் நீங்களா? எங்கே இந்த பக்கம்?” என்றான்.
“சும்மாதான்... தீபாவளிக்கு துணி எடுக்கலாம்ன்னு வந்தேன்.”
ஆதிரை அவனைப் பார்த்தான். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற சதை பிடிப்பு. ஒழுங்காய் வாரிய தலை. கண்களில் சுடர்விடும் படிப்பறிவு. முகத்துக்கேற்ற மீசை. லேசாக தொப்பை தெரிவதைப் போன்ற தோற்றம். கருப்பு கலர் பேண்ட். வெள்ளை நிற சட்டை. அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.
ஆதிரையை பார்த்ததும் “இவங்க...” என்று இழுத்தான்.
“என்னுடைய ஒரே தங்கை ஆதிரை” குகன் அறிமுகப்படுத்தி வைக்க,“அலோ...” என புன்னகை புரிந்தான். கூடவே அவளை அளந்தான்.
‘எப்படியும் என் தோள் உயரம் இருப்பாள். என்னைவிட நிறம். இறுக்கிப் பின்னாமல் தளர்ந்த சடை. வட்ட முகத்தில் ஒட்டும் பொட்டு பளிச்சென இருந்தது. முத்தமிடும் உணர்வை தூண்டுகிற இதழ்கள். என்னவோ மந்திரவித்தை கற்ற விழிகள். இழுத்துக் கொண்டதே என் பார்வையை. திணறடிக்கும் இளமைகள். வளைந்த வாகான இடை. தரைவரை புரளும் சேலை. அழகு மான் ஒன்று சாலையில் நிற்பதைப் போல் நிற்கும் இவள் குகனின் தங்கையா? இப்படி ஒரு தங்கை இருக்கிறாளா இவனுக்கு?”
இப்படியெல்லாம் எண்ணினான் சந்திரன். ஆதிரை அடக்கமாகப் புன்னகைத்தாள். அவளின் அடக்கமான புன்னகைக்குள் அடங்கிப் போனான் சந்திரன். அவள் சிரித்தது நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஒருவித மென்மையான துடிப்புகள். அவசரமாக, ஏதாவது பேசியாக வேண்டுமே என
“உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா சொல்லவே இல்லையே...” என்றான்.
“ஆமா. சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலை. ஆதிரை இவர் எங்கள் மேனேஜர் சந்திரன்” என்று அவனை அறிமுகப்படுத்தினான்.
அவன் மேனேஜர் எனத் தெரிந்ததும் ஒரு மதிப்பு வந்தது அவன் மேல்.
“என்ன படிக்கறீங்க?” என்று அண்ணனை விடுத்து நேரடி உரையாடலில் இறங்கினான் சந்திரன்.
“படிச்சு முடிச்சிட்டேன். பி.ஏ. இப்ப ஒரு பள்ளியில வேலை பார்க்கிறேன்.”
“ஓ...” என்றவன் மேற்கொண்டு என்ன பேசுவதென அண்ணன் பக்கம் திரும்பி “என்ன தீபாவளிக்கு துணி எடுக்க வந்தீங்களா?” என்றான்.
“ஆமாம். அதான் துணிக்கடை வாசலில் நின்னுகிட்டு ரெண்டு பேரும் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று குகன் சொல்ல ஆதிரை பானுப்பிரியா கண்களில் கோபம் காட்டினாள்.
“விவாதமா... சண்டை! நீங்களே இதைக் கேளுங்க மிஸ்டர்...” என்று அவன் பெயர் தெரியாமல் நிறுத்தினாள்.
“என் பெயர் சந்திரன்” என்றான் சந்திரன்“மிஸ்டர் சந்திரன்” என்று தொடங்கியவள் - “இங்க பாருங்க, எங்க அண்ணனோட சம்பளம் மூவாயிரம்.”
“தெரியும்.”
“என் சம்பளம் அறுநாறு”
“அடப் பாவமே...”
“இதுல மாசா மாசம் சேர்த்த பணம் கொஞ்சம். மொத்தமா இப்ப கைவசம் ஐய்யாயிரம். இதுல தீபாவளி டிரஸ் எடுக்கணும். சுவீட், பட்டாசு... இப்படி நிறைய. இந்த அண்ணன் என்னன்னா எல்லாப் பணத்துக்கும் எனக்குப் பட்டுச்சேலை எடுத்தாலே எடுத்தபடின்னு ஒத்தக்கால்ல நிக்கிது. எங்க அண்ணனுக்கு டிரஸ் வேண்டாமாம்.
தீபாவளின்னா சந்தோஷமா கொண்டாடணும். நான் மட்டும் பட்டுல நிக்கணும். இவர் பழைய டிரஸ்ல நிக்கறதை பார்த்துகிட்டு நான் எப்படி சந்தோஷமா இருக்கமுடியும். பட்டு வேண்டாம். வேற சேலை எடு. உனக்கும் பேண்ட், சட்டை எடுத்துக்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறார். நீங்கள் சொல்லுங்க சார்...”
அவளின் கண்ணில் அதற்குள் கண்ணீர் தளும்பியது
Kundenbewertungen
contemporary fiction, drama, relationship, Kudumba Novel, romance, family stories, R.Sumathi